Advertisment

Punnagai Logo

அண்ணா பல்கலை முறைகேடு – ஆளுநர் அதிரடி நடவடிக்கை

அண்ணா பல்கலை தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்த முறைகேட்டில், உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என,  ஆளுனர் அலுவலகம் விசாரணையை துவக்கியுள்ளது. இதனால், பல்கலை முதல் தலைமை செயலகம் வரையிலான உயர் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

சென்னை, அண்ணா பல்கலை கழகத்தில், இன்ஜினியரிங் மாணவர்களின், தேர்வுத்தாள்களை மறுமதிப்பீடு செய்ததில், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

2017 ஏப்ரல் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின், விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்தபோது, தலா, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்று, தேர்ச்சி பெறாத மாணவர்களை, தேர்ச்சி பெற வைத்ததாக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, பல்கலையின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, பல்கலையின் திண்டிவனம் உறுப்பு கல்லுாரி, முன்னாள் முதல்வர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவகுமார் என, மூன்று பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, உதவி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என, மேலும், ஏழு பேர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னையில்,உயர்கல்வி துறைக்கே தெரியாமல், லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில், கூடுதல் எஸ்.பி., மீனாவிடம், சம்பிரதாயமான புகார் பெற்று, நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும், யாரையும் கைது செய்யவில்லை. சரியான ஆவணங்களை கைப்பற்றிய பின், கைது செய்யலாம் என, லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளதாககூறப்படுகிறது.

தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு நடந்த காலகட்டத்தில், பல்கலைக்கு துணைவேந்தர் இல்லை. உயர்கல்வித்துறை அதிகாரிகளே நேரடியாக, பல்கலை நிர்வாகத்தை ஓராண்டுக்கு மேலாக நடத்தி வந்தனர். எனவே, லஞ்ச ஒழிப்பு போலீசின் நடவடிக்கை, உயர்கல்வி அதிகாரிகள் வரை விரிவடைந்துள்ளது. உயர்கல்வித்துறை அனுமதி பெற்ற பிறகே, அண்ணா பல்கலையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், தேர்வுத்துறையில் புதிய திட்டங்களையும், உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே, உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல், முறைகேடு நடந்தது எப்படி; அவர்களுக்கு தெரியவில்லை என்றால், நிர்வாகத்தை முறையாக நடத்தவில்லையா என்றும், போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாவை, சில உயர் அதிகாரிகள் பகடைக்காயாக பயன்படுத்தி விட்டதாகவும், பல்கலை வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளுக்கு சலுகை காட்ட தவறியதால், அவரை சிக்க வைத்து விட்டதாகவும், பேராசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே, இந்த பிரச்னை குறித்த உண்மையை கண்டறிய, அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா, தனியாக விசாரணை கமிட்டி அமைத்துள்ளார்.

அத்துடன்,  ஆளுனர் மாளிகைக்கும், இந்த பிரச்னை தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலை வேந்தரான  ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்திற்கு, பல்கலையில் நடந்த முறைகேடு விவகாரம், பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. எனவே, இந்த பிரச்னையில், போலீசாரின் விசாரணையில் குறுக்கிடாத வகையில், துறை ரீதியாக, தனி விசாரணையை கவர்னர் அலுவலகம் துவக்கியுள்ளது. துணைவேந்தர் இல்லாத காலகட்டத்தில், நிர்வாக பணிகளை மேற்கொண்டவர்கள் யார், யார்; தேர்வுத்துறை பணிகளில் குறுக்கிட்ட உயர்கல்வி அதிகாரிகள் யார் என, விசாரிக்கப்படுகிறது. மேலும், அண்ணா பல்கலை வழியாக, தங்கள் குடும்பத்தினரின் உறவினர்களுக்கு, தேர்விலும், வேலைவாய்ப்பிலும் சலுகை பெற்ற; சலுகை பெற முயன்ற அதிகாரிகள் யார் என்ற, விபரங்களை தோண்டி எடுக்கும் பணியையும்,  ஆளுனர் அலுவலகம் முடுக்கி விட்டுள்ளதாக, ராஜ் பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 

Advertisment

English Summary

Anna's university abuse !

 
NewsFast Logo