Advertisment

Punnagai Logo

மத்திய அரசின் முந்தைய பட்ஜெட் - முக்கிய அம்சங்கள் - FLASH BACK 

இந்தியப் பொருளாதார வரலாற்றில், பெரும் புயலைக் கிளப்பிய பண மதிப்பு நீக்கத்துக்குப் பின் தாக்கல் செய்யப்பட்ட 2017-18 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த நினைவுகளை சற்றே திரும்பி பார்க்கலாம் 

பிரணாப் முகர்ஜி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. நாடுளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

3-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜேட்லி

2017-2018-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் என்ற பொறுப்பில் 3-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அருண் ஜேட்லி.

முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டிருந்தது. இதேபோல வழக்கமான பிப்ரவரி 28-க்குப் பதிலாக, முதல்முறையாக  பிப்ரவரி 1-ம் தேதியே பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் பெறும் தனி நபர்களுக்கு வருமான வரி விகிதம் 10%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது. வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10% கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது.

* பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக ரூ.1.84 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையில் வெளிப்படைத்தன்மை

அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அரசியல் கட்சிகள் இனி ரொக்கமாக ரூ.2000 மட்டுமே நன்கொடையாக பெற முடியும். அதுநாள் வரை ரொக்கமாக ரூ.20,000 வரை நன்கொடை பெறலாம் என்ற நடைமுறை இருந்தது. அதேவேளையில் அரசியல் கட்சிகள் காசோலை மூலமாகவோ டிஜிட்டல் பரிவர்த்தனையின் மூலமாகவோ நன்கொடை பெறத் தடை ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

ரொக்கப் பண பரிவர்த்தனைக்கு கெடுபிடி

ரூ.3 லட்சத்துக்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக மேற்கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப வருமான வரிச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஊழலை ஒழிக்கவும், நிதிக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தவும் டிஜிட்டல் பொருளாதாரம் உதவும் என்பதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் 'பீம்' செயலி, போனஸைப் பரிந்துரை செய்யும் திட்டம் மற்றும் வணிகர்களுக்கு 'கேஷ் பேக்' திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

125 லட்சம் மக்கள் பீம் செயலியைப் பயன்படுத்தினர். இந்த வருடம் மட்டும் கூடுதலாக 10 லட்சம் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2017-ல் 20 லட்சம் ஆதார் சார்ந்த பிஓஎஸ் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

உயர்கல்வி, திறன் வளர்ப்பு  

உயர் கல்வியில் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. யுஜிசியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அங்கீகாரம், தரவரிசை மற்றும் தன்னாட்சி அந்தஸ்தின் அடிப்படையில் கல்லூரிகள் அடையாளம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் 'ஸ்கில் இந்தியா' திட்டம் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நாடு முழுக்க 100 சர்வதேச இந்திய திறன் வளர் மையங்கள் நிறுவப்படம் என்று கூறப்பட்டது.

ஜவுளித்துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ஏற்கெனவே ஒரு சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல தோல் மற்றும் காலணி துறைகளிலும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது. 

கிராமப்புற மேம்பாடு:

கிராமப்புற மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன. பிரதான் மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் மார்ச் 2018-க்குள் அனைத்து கிராமப்புறங்களிலும் மின் வசதி செய்து தரப்படும் என்று கூறப்பட்டது. 

நாடு முழுவதும் ப்ளூரைடு பாதிப்புள்ள 28,000 குடிநீர் ஆதாரங்கள் அடுத்த 4 ஆண்டுகளில் சுத்தப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்:

100 நாள் வேலைதிட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த விண்வெளி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. 

வேளாண் துறைக்கான அறிவிப்புகள்

இந்த நிதியாண்டில் வேளாண் துறை வளர்ச்சி 4.1% இருக்கும் என எதிர்பார்ப்பு தெரிவிக்கப்பட்டது. 2017 - 18 நிதியாண்டில் விவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் வருவாயை 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது. நீர்ப்பாசனத்துக்காக ரூ,40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

2019 ஆண்டின் இறுதியில் 50,000 கிராம பஞ்சாயத்துகள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டது. நுண் சொட்டு நீர் பாசனத்துக்கு தொடக்க மூலதனமாக ரூ.5000 கோடி ஒதுக்கப்பட்டது. 

பிற முக்கிய அம்சங்கள் 

ஆர்பிஐயின் பழைய கட்டண ஒழுங்குமுறை வாரியம் புதிதாக மாற்றியமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

1.5 லட்சம் துணை சுகாதார மையங்கள் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மற்றும் குஜராத்தில் புதிதாக இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் நிதியுதவி ரூ. 52,393 கோடியாக உயர்த்தப்பட்டது.

பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடுபவர்களின் சொத்துக்களை முடக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தலைமை தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் விநியோகிக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ரயில்வே துறை அறிவிப்புகள் 

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

2017 - 18 நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.1,31,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதில் ரூ. 51,000 கோடி அரசு பங்களிப்பாக இருக்கும். 

இந்த நிதியாண்டில் 3,500 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே இருப்புப் பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

ரயில்வே வாரியத்தின் செலவினங்கள், ரயில்வே சேவை மீதான சமூக எதிர்பார்ப்புகள், சேவை தரம், ரயில்வே துறை எதிர்கொள்ளும் போட்டி ஆகியனவற்றின் அடிப்படையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பண மதிப்பு நீக்கத்துக்கு பாராட்டு 

"நல்ல நோக்கங்கள் தோற்பதில்லை என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. அதன்படி கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையான பண மதிப்பு நீக்கம் ஒரு போதும் தோல்வியடையாது. பண மதிப்பு நீக்கத்தின் மூலம் ஜிடிபி உயரும், வரி வசூல் அதிகரிக்கும்." என்று கூறப்பட்டிருந்தது. 

 
 

Advertisment

English Summary

A Flash back of Indian Budget 2017-18

 
NewsFast Logo