Advertisment

Punnagai Logo

குஜராத்தில் மீண்டும் பலப்பரிட்சை- உள்ளாட்சித் தேர்தலில் மல்லுகட்டும் காங்கிரஸ், பாஜக

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 6-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது.

என்றாலும் அந்த கட்சிக்கு கடந்த தேர்தல்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான இடங்களிலேயே வெற்றி கிடைத்தது. இது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள 1432 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வார இறுதியில் விண்ணப்பம் கொடுப்பது தொடங்குகிறது. விண்ணப்ப மனு கொடுக்க 20 ஆம் தேதி கடைசி நாளாகும்.

அடுத்த மாதம்  4 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடை பெறும். 6 ஆம் தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.

கிராம பஞ்சாயத்து தேர்தல் காரணமாக சுமார் 2 மாத இடைவெளியில் மீண்டும் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே பலப்பரீட்சை தொடங்கியுள்ளது. முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் குஜராத் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வெற்றி கிடைத்து இருந்தது.

சமீபத்திய சட்டசபை தேர்தலின்போதும் கிராமப் புறங்களில் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. இதனால் பா.ஜ.க. தலைவர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.

கிராம பஞ்சாயத்து அமைப்புகளில் வெற்றியை அதிகப்படுத்த பா.ஜ.க. சார்பில் நிறைய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியும் குழுக்களை அமைத்து பிரசாரத்தை தொடங்கி உள்ளது. இந்த தடவை யாருக்கு அதிக வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Battle again in gujarat-Congress and BJP in the local elections

 
NewsFast Logo