Advertisment

Punnagai Logo

"ஆதார்" தகவல்களை திருட முடியுமா ? -.'டிராய்' தலைவர் 'சாவால்' விட்டு மாட்டிக்கொண்டாரா .?

முன்னதாக 'டிராய்' எனப்படும், இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு ஆணையத்தின் தலைவர், ஆர்.எஸ்.சர்மா, தன் ஆதார் அடையாள எண்ணை, 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்டு, 'இதை வைத்து, என்னை என்ன செய்து விட முடியும்' என, சவால் விட்டார். 

இதுபற்றி, 'டுவிட்டரில்' அவர் கூறியிருந்ததாவது: இந்த எண்ணை வைத்து, யாராவது எனக்கு தீங்கு இழைத்து காட்ட முடியுமா. என்னை, 'டிராய்' தலைவராக பார்க்க வேண்டாம். சாதாரண இந்திய குடிமகனாக கருதி, இந்த சவாலில் வெற்றி பெற முடியுமா என பாருங்கள்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதனால், டுவிட்டரில், பலத்த வாக்குவாதம் எழுந்தது. சிலர், சர்மாவை பற்றிய தகவல்களை டுவிட்டரில் பதிவிட்டனர்.ஐரோப்பிய நாடான, பிரான்சை சேர்ந்த, . எலியாட் ஆண்டர்சன், இணைய தகவல்களை திருடும், 'ஹேக்கர்ஸ்'களில் முக்கியமானவர்.

இவர், சர்மாவின், மொபைல் எண், மற்றொரு மொபைல் எண், புகைப்படங்கள், வீட்டு முகவரி, பிறந்த நாள், 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண் போன்றவற்றை, டுவிட்டரில் பகிரங்கமாக வெளியிட்டார், மேலும் சிலர், 'சமூக வலைதளத்தில் இதுபோன்ற சவால்களை விடுவது நல்லதல்ல' எனக் கூறி எச்சரித்தனர். 

தன் சவால்களுக்கு பதிலாக, டுவிட்டர் பயனாளர்கள் அளித்துள்ள தகவல்களில் பெரும்பாலானவை பழையவை எனக்கூறிய, சர்மா, 'பான்' எண் தொடர்பான தகவல்கள் சரியானவைதானா என்பதை உறுதி செய்யவில்லை. டுவிட்டரில் நடந்த வாக்கு வாதம், நேற்று முன்தினம் இரவு வரை நீடித்தது. 

சிலருடன், சர்மாவே நேரடியாக பதில் தந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். சர்மாவின் வீட்டு முகவரி என்று ஒருவர் வெளியிட்ட தகவலை, 'பழையது' என நிராகரித்த சர்மா, 'உங்களுக்கு என் புதிய முகவரி தேவையா' எனக் கூறி மல்லுக்கு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

எலியாட் ஆண்டர்சன், 'இத்துடன் நீங்கள் நிறுத்திக் கொள்வது நல்லது என எச்சரிக்கிறேன். ஆதார் எண் வெளியிடுவது நல்ல யோசனை அல்ல' என, சர்மாவை மீண்டும் எச்சரித்தார். சர்மா பற்றிய பல தகவல்களை அம்பலப்படுத்தி விட்டதாக, டுவிட்டரில் பலர் பெருமைப்பட்டனர். 

அதை மறுத்த சர்மா, 'போன் எண் உள்ளிட்ட தகவல்களை வெளியிட முடியுமா என, நான் சவால் விடவில்லை; ஆதார் எண்ணை வைத்து தனிப்பட்ட முறையில் எனக்கு தீங்கு இழைக்க முடியுமா' என்று தான் கேட்டேன் என்றார்.

சர்மா எழுப்பிய சவாலை, 2,850 பேர், மீண்டும், 'டுவிட்' செய்திருந்தனர்; 3,364 பேர்,'லைக்' செய்திருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின்னும், இந்த வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருந்தது. சர்மா விவகாரத்தால், ஆதார் தகவல்கள் பாதுகாப்பானதா என்பது குறித்து, சமூக வலைதளங்களில் பல்வேறு சந்தேகங்களை தெரிவித்துள்ளனர். 

'டிராய்' தலைவர் சர்மாவின் தகவல்கள் வெளியானது குறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்மாவின் மொபைல் எண் மற்றும் அவரைப் பற்றிய தகவல்கள், ஆதார் எண் வழங்கும் பிரத்யேக அமைப்பின் இணைய தளத்தில் இருந்து திருடப் படவில்லை. சர்மாவின் ஆதார் எண் மூலமாக, அவரைப் பற்றிய தகவல்களை, 'ஹேக்கர்'கள் வெளி யிட்டதாக கூறுவது பொய். கூகுள் தேடு தளம் உள்ளிட்டவற்றில் இருந்து, அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளனர்.

சர்மா, ஏற்கனவே, தேசிய தகவல் மையத்தின் தலைவராக பதவி வகித்தவர். அந்த இணைய தளத்தில் இருந்து, அவரது மொபைல் போன் எண்ணை எடுத்துள்ளனர்.தற்போது அவர், டிராய் தலைவராக இருப்பதால், அந்த துறை யின் இணையதளத்தில், அவரது பிறந்த தேதி இடம் பெற்றுள்ளது. 

சர்மா, டில்லி - ஐ.ஐ.டி.,முன்னாள் மாணவர். ஐ.ஐ.டி., இணையதளத்தில் இருந்து, அவரது, 'இ - மெயில்' முகவரியை பெற்றுள்ளனர். மேலும், அவரது, 'விக்கிபீடியா' விலும், அவரைப் பற்றிய தகவல்களை எடுத்துள்ளனர்.இப்படி, பல வகையில், அவரது தகவல்களை சேகரித்து, அவற்றை வெளியிட்டுள்ளனர். ஆதார் எண் மூலமாக, ஒருவரைப் பற்றிய தகவல்களை திருட முடியாது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரும், மலிவான அரசியல் காரணங்களுக்காக, இந்த விவகாரத்தில், பொய் தகவல்களை பரப்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

 
 

Advertisment

English Summary

Can Aadar steal information? - Is the 'Trai' leader challenge gone away?

 
NewsFast Logo