Advertisment

Punnagai Logo

 அமலாக்கப்பிரிவு தேசநலனுக்கு எதிராக செயல்படுகிறது  - விஜய் மல்லையா 

வங்கி கடனை திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் என்னுடைய முயற்சியை அமலாக்கப்பிரிவு தடுத்தது என மும்பை கோர்ட்டில் விஜய் மல்லையா தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் செலுத்தாமல் தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிதாக கொண்டுவரப்பட்ட ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ், விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, மும்பை தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. 

 மத்திய அரசு தலைமறைவாக உள்ள பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்வதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது. இதன்படி நடவடிக்கையை எடுக்க அமலாக்கத்துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய அவசர சட்டத்தின் கீழ், விஜய் மல்லையா மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட்டின் அனுமதியை பெறவும் அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளது எனவும் தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவின் தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், வங்கி கடனை திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் என்னுடைய முயற்சியை அமலாக்கப்பிரிவு தடுத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.  

 விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. “ கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, கடனை திருப்பிச் செலுத்த நான் தொடர்ந்து முயன்று வருகிறேன். ஆனால், அந்த முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமலாக்கத்துறை எதிர்த்து வந்தது. பொது மற்றும் தேசநலனுக்கு எதிராக செயல்படுகிறது. லண்டன் கோர்ட்டில், என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணைக்கு நான் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். எனவே, நான் இந்தியாவுக்கு வர மறுப்பதாக கூறுவது சரியல்ல என்று மல்லையா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை 28ம் தேதி நடக்கிறது.

 
 

Advertisment

English Summary

ED Acts against national interest - Mallaya

 
NewsFast Logo