Advertisment

Punnagai Logo

மோடி படத்தை வைக்காவிட்டால் சப்ளை கட்- பெட்ரோல் பங்குகளை மிரட்டும் எண்ணெய் நிறுவனங்கள்

பெட்ரோல் பங்க்குகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள வாய்மொழி உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தங்களுடைய உத்தரவை ஏற்காத நிறுவனங்களுக்கு பெட்ரோல் சப்ளை செய்யப்படாது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக இப்போது அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. 

மத்தியில் ஆளும் பாஜ மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக பெரிய அளவில் விளம்பரங்களை செய்ய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களின் கீழ் இயங்கும் பெட்ரோல் பங்க்குகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இதை ஏற்க மறுத்தால் சம்பந்தப்பட்ட பங்க்குக்கு பெட்ரோல், டீசல் சப்ளை நிறுத்தப்படும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்றும் ஊழியர்களின் மதம், ஜாதி, வயது, ஆதார் எண், திருமணத்தகுதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை கேட்டு எண்ணெய் நிறுவனங்கள் பங்க் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், தற்போது எண்ணெய் நிறுவனங்களின் இந்த உத்தரவு அடுத்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. மக்களவை தேர்தல் விளம்பரத்துக்காக பாஜ பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ஆனால், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா விளம்பர பதாகைகளை (பிரதமர் மோடி இடம்பெற்றுள்ளது) வைக்கத்தான் கூறியுள்ளோம். அதை நாங்கள் வற்புறுத்தவில்லை. எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுத்தும் இந்த நல்ல திட்டம் பொதுமக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் இதை கூறியுள்ளோம்’’ என்றனர்.

 
 

Advertisment

English Summary

Oil companies threaten supply of petrol cuts

 
NewsFast Logo