Advertisment

Punnagai Logo

மார்க்கெட்டிங் பாடம் நடத்துவதற்கு தகுதியானவர் - செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு ஆனந்த் மஹிந்திரா பரிசு

மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா , ஹரியானாவைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவருக்கு புதிய பணியிடத்தை பரிசாக வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதற்கான வடிவமைப்பை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் இந்த பணியிடத்தை செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் விரைவில் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் 17 அன்று செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்த ஆனந்த் மஹிந்திரா, வாட்ஸ் அப் மூலம் இந்தப் படம் தனக்கு கிடைத்ததாகவும், இந்தப் படத்தில் இருக்கும் தொழிலாளி இந்திய மேலாண்மை நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பாடம் நடத்துவதற்கு தகுதியானவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

செருப்பு தைக்கும் கடையை ‘செருப்புகளின் காயங்களை போக்கும் மருத்துவமனை’ என்று விளம்பரம் செய்திருந்த அந்த தொழிலாளி, அதற்கு கீழ் டாக்டர் நர்ஸி ராம் என்று தனது பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.

நர்ஸி ராமின் மார்க்கெட்டிங் முறையால் கவரப்பட்ட  ஆனந்த் மஹிந்திரா, இவர் எங்கு இருக்கிறார் என்று யாராவது சொல்ல இயலுமா? இவரது ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சிறிய அளவில் முதலீடு செய்ய தயாராக இருக்கிறேன் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 2 வாரங்கள் கழித்து மஹிந்திரா நிறுவன ஊழியர்கள் இந்த செருப்பு தைக்கும் தொழிலாளியைக் கண்டறிந்து அவரது நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்த போது . தனக்கு பண உதவி வேண்டாம் என்றும்   தான் வேலைசெய்வதற்கு ஏற்ற வகையில் நல்ல பணியிடம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் நர்ஸி ராம்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு புதிய பணியிடத்தை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, அந்த பணியிடத்தின் வடிவமைப்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவியதற்காக பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

 
 

Advertisment

English Summary

Worth of marketing lesson - Anand Mahindra Prize for slipper worker

 
NewsFast Logo