Advertisment

Punnagai Logo

ஒரே நாளில் 7 பதக்கங்கள் – இந்தியா அசத்தல்

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியின் 6-வது நாளான நேற்று இந்தியா 2 தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது.

துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான 4 பேர் கொண்ட ஸ்கல்ஸ் பிரிவின் இறுதி சுற்றில் சவான் சிங், டட்டு போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் கொண்ட இந்திய அணி களம் இறங்கியது. படகின் இருபுறமும் துடுப்பை வேகமாக இயக்கிய இவர்கள் 2 ஆயிரம் மீட்டர் தூரத்தை 6 நிமிடம் 17.13 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். இந்தோனேஷியா 2-வது இடமும் (6 நிமிடம் 20.58 வினாடி), தாய்லாந்து 3-வது இடமும் (6 நிமிடம் 22.41 வினாடி) பெற்றது. ஆசிய விளையாட்டு துடுப்பு படகு போட்டியில் இந்தியா மகுடம் சூடுவது இது 2-வது முறையாகும்.

முன்னதாக துடுப்பு படகில் லைட்வெயிட் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர் துஷ்யந்த் 7 நிமிடம் 18.76 வினாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். தென்கொரியாவின் ஹியன்சு பார்க் (7 நிமிடம் 12.86 வினாடி) தங்கப்பதக்கமும், ஹாங்காங்கின் ஹின் சுன் சிவ் (7நிமிடம் 14.16 வினாடி) வெள்ளிப்பதக்கமும் பெற்றனர்.

இதே போல் துடுப்பு படகு லைட்வெயிட் இரட்டை ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் பவான்சிங், ரோகித் குமார் ஜோடி 7 நிமிடம் 04.61 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது. முதல் இரு இடங்களை ஜப்பான், வடகொரியா ஜோடிகள் பெற்றன. கனரக வாகன ஓட்டுனரின் மகனான பவான்சிங் தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய நாள் துடுப்பு படகு போட்டியில் 4 பிரிவுகளின் இறுதி சுற்றில் இந்தியா தோல்வி தழுவியது. இந்திய துடுப்பு படகுக்கு இது கருப்பு நாள் என்று பயிற்சியாளர் இஸ்மாயில் பெய்க் வர்ணித்தார். அதற்கு இந்திய வீரர்கள் நேற்று ஒரு வழியாக பரிகாரம் தேடிக்கொண்டனர்.

டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்- டெனிஸ் யேவ்செயேவ் (கஜகஸ்தான்) இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. இந்த ஆட்டம் 52 நிமிடங்கள் நடந்தது. ஒட்டுமொத்த ஆசிய போட்டி டென்னிஸ் வரலாற்றில் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவுக்கு கிடைத்த 4-வது தங்கம் இதுவாகும்.

ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் டெனிஸ் இஸ்தோமினிடம் (உஸ்பெகிஸ்தான்) தோற்று வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

Image result for !8 th Asian games India Medal winnersதுப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தகுதி சுற்றின் மூலம் இந்தியாவின் மானு பாகெர், ஹீனா சித்து ஆகியோர் முதல் 8 இடத்திற்குள் நுழைந்தனர். ஆனால் இறுதி சுற்றில் காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியனான 16 வயதான மானு பாகெர் (176.2 புள்ளி) 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு, மறுபடியும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

அதே சமயம் பஞ்சாப்பை சேர்ந்த 28 வயதான ஹீனா சித்து 219.2 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை அணிவித்துக் கொண்டார். இதில் சீனாவின் குயான் வாங் 240.3 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், தென்கொரியாவின் மின் ஜங் கிம் 237.6 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

இந்த ஆசிய விளையாட்டு திருவிழாவில் நேற்று தான் இந்தியாவுக்கு தித்திப்பு நிறைந்த நாள் என்று சொல்ல வேண்டும். டென்னிஸ் ஆண்கள் இரட்டையரில் தங்கப்பதக்கம், ஒற்றையரில் வெண்கலம், துடுப்பு படகு போட்டியில் ஒரு தங்கம், 2 வெண்கலம், பெண்கள் கபடியில் வெள்ளி, துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் என்று நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 7 பதக்கம் கிட்டியது.

 

 

 
 

Advertisment

English Summary

7 Medals in One Day - India

 
NewsFast Logo