Advertisment

Punnagai Logo

டோனியின், சர்வதேச 20 - 20 வாழ்க்கை முடிகிறது..! ஒரு நாள் போட்டிகளில் மட்டும் ஆட திட்டம்..!

அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதன் மூலம் சர்வதேச 20 கிரிக்கெட்டில் டோனியின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி இடம் பெறவில்லை. விக்கெட் கீப்பிங்கில் அசத்தும் டோனியால், ரன் குவிப்பில் முன்பு மாதிரி ஜொலிக்க முடியவில்லை. இதனால் தான் அவரை கழற்றி விட வேண்டிய சூழல் உருவாகி விட்டது. 

அவருக்கு பதிலாக 21 வயது விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் 37 வயதான டோனியின் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக கிரிக்கெட் நிபுணர்கள் சொல்கிறார்கள். 

2007–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றுத் தந்து வரலாறு படைத்த டோனி இதுவரை 93 இருவது ஓவர் ஆட்டங்களில் விளையாடி 2 அரைசதம் உள்பட 1,487 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 54 கேட்ச், 33 ஸ்டம்பிங் செய்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு (2019) மே இறுதியில் தொடங்கும் ஒரு நாள் போட்டி உலக கோப்பை வரை ஆட வேண்டும் என்பது தான் டோனியின் திட்டமாகும். ஆனால் அவர் போதிய பார்ம் இல்லாததால் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று ஒரு சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். 

சச்சின் தெண்டுல்கருக்கு இந்த மாதிரி நெருக்கடி ஏற்பட்ட போது ஒரு நாள் போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொண்டு, சில காலம் டெஸ்டில் மட்டும் நீடித்தார். அவரது பாணியில் டோனி, 20 ஓவர் போட்டியை மறந்து விட்டு, ஒரு நாள் போட்டியில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. டோனி ஏற்கனவே 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.
 

 
 

Advertisment

English Summary

Dhoni retires from 20-20?

 
NewsFast Logo