Advertisment

Punnagai Logo

தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எழுச்சி பெற்றது. இதனால் இந்த 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கடந்த பத்து 20 ஓவர் போட்டித் தொடர்களை இழக்காத இந்திய அணி அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் ஆவலில் உள்ளது. 2-வது ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல தொடக்கம் (79 ரன்) அமைத்து தந்ததும், பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், கலீல் அகமது ஆகியோர் கட்டுக்கோப்புடன் பந்து வீசியதும் வெற்றியை எளிதாக்கியது. 

அதே போன்று இன்றைய ஆட்டத்திலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால், தொடரை வசப்படுத்த முடியும். 

இந்திய அணி ஹாமில்டனில் 4-வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்கி ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 92 ரன்னில் சுருண்டதை யாரும் மறந்து விட முடியாது. அதே மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடப்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 மற்றும் டி.டி. ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

 
 

Advertisment

English Summary

Rohit Sharma's Team India to take on New Zealand in the third T20I

 
NewsFast Logo