Advertisment

Punnagai Logo

66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தரப்பட்டது

போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த முகாமில் 43 ஆயிரம் மையங்கள் மூலம் 66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

கோயம்பேடு, பிராட்வே, தியாகராயநகர் உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டன. அதேபோல ரெயில் நிலையங்களிலும் சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டன.

அந்தவகையில் பஸ்-ரெயில் நிலையங்கள், சோதனை சாவடிகள், சுங்கச்சாவடிகள், விமான நிலையங்கள் என 1,652 பயணவழி மையங்கள் சொட்டு மருந்து வழங்குவதற்காக நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. தவிர 1,000 நடமாடும் குழுக்கள் மூலம் தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டன. இதில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொட்டு மருந்து வழங்குவதற்காக மொத்தம் 1,640 மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதுதவிர நடமாடும் முகாம்களும் களத்தில் இறக்கப்பட்டன. இதுதவிர சென்னையில் பூங்காக்கள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களிலும் சொட்டு மருந்து முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த முகாம்களில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுடைய குழந்தைகள் என மொத்தம் 66 லட்சத்து 10 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இது 93 சதவீதம் ஆகும். சொட்டு மருந்து வழங்கப்படும்போதே, குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது.

இதுதவிர நேற்று மாலை 4 மணியில் இருந்தே நடமாடும் குழுக்கள் ஒவ்வொரு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படாத குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர். போலியோ சொட்டு மருந்து அடுத்த தவணையாக மார்ச் 11-ந் தேதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

 
 

Advertisment

English Summary

66 lakh children were given polio drops

 
NewsFast Logo