Advertisment

Punnagai Logo

அண்ணா பல்கலை மதிப்பெண் முறைகேடு – 3 பேர் சஸ்பெண்ட்

அண்ணா பல்கலை விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடு செய்து, போலியாக மதிப்பெண் வழங்கிய விவகாரத்தில், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, இரண்டு பேராசிரியர்கள் என, மூன்று பேர் அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். 

அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளுக்கு, 2017 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த தேர்வில் மறுமதிப்பீடுக்காக, 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், 73 ஆயிரத்து, 733 பேர் மறுமதிப்பீட்டின் வாயிலாக தேர்ச்சி பெற்றனர். அதிலும், 16 ஆயிரத்து, 636 பேர், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் பலர், ஏற்கனவே தோல்வி அடைந்த, 10 பாடங்கள் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பிரச்னை குறித்து, மாணவர்கள் தரப்பில், உயர்கல்வி துறைக்கு பல முறை மனுக்கள் அனுப்பியும், நடவடிக்கை எடுக்கப்படாததால், லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பினர். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு துறை ரகசிய விசாரணை நடத்தியதில், மறுமதிப்பீட்டில், மாணவர்கள் தேர்ச்சி பெற தலா, 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த வகையில், கூடுதல் மதிப்பெண் வழங்க, கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஊழல், அண்ணா பல்கலையின் மறுமதிப்பீடு தேர்வு மையம் அமைக்கப்பட்ட, திண்டிவனத்தில் உள்ள பல்கலையின் உறுப்பு கல்லுாரியில் நடந்துள்ளது. இதற்கு மூளையாக, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக, அப்போது பதவி வகித்த உமா; திண்டினம் கல்லுாரியின் தேர்வு மைய ஒருங்கிணைப்பாளரும், கல்லுாரி முதல்வராகவும் பொறுப்பிலிருந்த, உதவி பேராசிரியர் விஜயகுமார்; தேர்வு மையத்தின் மற்றொரு ஒருங்கிணைப்பாளரும், .திண்டிவனம் கல்லுாரி உதவி பேராசிரியருமான சிவகுமார் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

 இவர்கள் தங்களுக்கு தெரிந்த மாணவர்களை, இடை தரகர்களாக பயன்படுத்தி, வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்இந்த பிரச்னையில், உமா, விஜயகுமார், சிவகுமார் ஆகியோருடன், விடை திருத்த பணியில் ஈடுபட்ட, ஏழு பேராசிரியர்கள் மீதும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, உயர்கல்வித்துறையில் இருந்து முதலில் புகார் வராததால்,லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்.பி., மீனா புகார் அளித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உமாவின் வீடு, திண்டிவனத்திலுள்ள பேராசிரியர்கள், விஜயகுமார், சிவகுமார் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, அண்ணா பல்கலை துணைவேந்தர், எம்.கே.சுரப்பாவும் விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து, தற்போது, பேராசிரியராக பணியாற்றி வரும், உமா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், திண்டிவனம் அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி முதல்வர் பதவியிலிருந்து விஜயகுமார் நீக்கப்பட்டார். அத்துடன், அவரும், சிவகுமாரும், பேராசிரியர் பொறுப்பில் இருந்தும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளுக்கான, விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம், அரசியல் வட்டாரத்திலும், கல்வித்துறை வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
 

Advertisment

English Summary

Anna University score - 3 people suspended

 
NewsFast Logo