Advertisment

Punnagai Logo

மேக்கேதாட்டு அணை - விவகாரம் நாளை தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம்

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், காவிரியின் குறுக்கே எந்தத் திட்டப் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கக் கூடாது என மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்துக்கு எந்த அனுமதியையும் அளிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

இதனிடையே மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ அல்லது சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தையோ கூட்டி விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்து வந்தன. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பேரவைச் செயலகம் அறிவிப்பு: தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பான ஆலோசனை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இதற்கான அறிவிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுடன் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டார். 

மாலை 4 மணிக்குக் கூடவுள்ள பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்மொழிவார். அவர் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் உரையாற்றுவர். எதிர்க்கட்சிகளின் வாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி உரையாற்றுவார். இறுதியில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

ஓராண்டில் இரண்டாவது முறையாக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப் பேரவையில் திறப்பதற்காக சிறப்புக் கூட்டம் கூடியது. இதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக பேரவையின் சிறப்புக் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்நிலையில், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, அதிமுக எம்.பி.,க்களுடன்அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
 

 
 

Advertisment

English Summary

Assembly special meet tomorrow

 
NewsFast Logo