Advertisment

Punnagai Logo

கட்டப்பஞ்சாயத்துக்கு 50ஆயிரம்..! - காவல் உதவி ஆணையர் கைது ..! 

தமிழகத்தின் பல காவல்நிலையங்கள், உதவி ஆணையர் அலுவலகங்களில் சட்டத்துக்குப் புறம்பாக பணத்தை வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து பேசி வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், திருச்சி உதவி ஆணையர் அருள் அமரன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கி கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள ஹீபர் சாலையில், திருச்சி மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம், காவல் கண்காணிப்பு மையம் உள்ளிட்டவை உள்ளன. இந்த வளாகத்தில் உதவி ஆணையர் அலுவலகமும் இயங்கிவருகிறது. இதில், குற்றப்பிரிவு உதவி ஆணையர் அருள்அமரனும் ஒருவர். 

திருச்சி ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த சீதாராமன் என்பவ,ர்  திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள செம்பட்டி ஏரியாவில், தனக்கு சொந்தமாக உள்ள இடம் தொடர்பான பிரச்னைக்காக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் சீதாராமன், திருச்சி மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகார், உதவி ஆணையர் அருள் அமரனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து, உதவி ஆணையர் அருள் அமரன் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில், அந்தப் புகாரைக் கொடுத்த சீதாராமனை அழைத்து, தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், அந்தப் பணத்தைக் கொடுக்க மனமில்லாத சீதாராமன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புதுறை போலீஸாரிடம் புகார் கொடுத்தார். 

அதன்படி நேற்று இரவு சீதாராமன், உதவி கமிஷனர் அருள்அமரன் அலுவலகத்திற்கு வந்து, அவரிடம் ரூ.50 ஆயிரத்தைக் கொடுத்தார். அதை அருள்அமரன் பெற்றபோது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் அருள்ஜோதி, சக்திவேல் உள்பட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 10 பேர் அதிரடியாக அந்த அலுவலகத்திற்குள் புகுந்தனர். அவர்கள், உதவி ஆணையர் அருள்அமரனை கைதுசெய்து, விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக உதவி ஆணையர் அருள் அமரனின் கிராப்பட்டி வீட்டிலும் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. விசாரணையில் அருள் அமரன் இதுபோன்று பலரிடம் பணம் வாங்கி, பஞ்சாயத்து பேசியதாகவும் தெரியவந்துள்ளது.
 

 
 

Advertisment

English Summary

Assistant Commissioner arrested

 
NewsFast Logo