Advertisment

Punnagai Logo

பா.ஜ.க வை சீண்டிப்பார்க்கும் அதிமுக - ஆவேசத்தில் பா.ஜ.க

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மற்றும் ரபேல் விவகாரத்தில் அடி மேல் அடி வாங்கிவரும் பாஜகவின் நிலை, புலி இளைத்தால் எலி என்கிற கதையாகி விட்டது. 

இதுவரை மத்திய அரசு சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டிவந்த அதிமுக, கடந்த சில நாட்களாக தன்மானம் பேசத் தொடங்கிவிட்டது.  

கஜா புயல் நிவாரணத்தில் பாரபட்சம், சபரிமலை விவகாரத்தில் மதவாதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தமிழகத்தில் பாஜக அம்பலப்பட்டுள்ள நிலையில், பாஜக வை எதிர்த்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுபோடுவார்கள் என்பதால், பாஜக வை அதிமுக புறக்கணிக்கத் தொடங்கியுள்ளது என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

மக்களவை துணை சபாநாயகர் மற்றும் அதிமுக மக்களவை உறுப்பினர் தம்பிதுரை சமீபகாலமாக பாஜ.,வின் நடவடிக்கைகளை எதிர்த்து கேள்வி எழுப்பி வருகிறார். 

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது, பொதுப் பிரிவின் ஓட்டை பெறுவதற்காக பாஜக  செய்யும் செயல் என தம்பிதுரை விமர்சித்திருந்தார்.

பிரதமர் மோடியின் தேர்தல் வாக்குறுதிப்படி கருப்பு பணத்தை மீட்டு எல்லோருக்கும் 15 லட்சம் கொடுத்திருந்தால் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பதே தேவைப்பட்டிருக்காது என்று பேசி மோடியை பகிரங்கமாக பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திஇருந்தார். 

மேலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். 

தமிழ்நாட்டில் ஏற்கெனவே தனித்து விடப்பட்டிருக்கும் பாஜகவுக்கு அதிமுக கூட்டணி இல்லை என்றால் மொத்தமே ஊத்திக்கொள்ளும் என்பதை அறிந்த பாஜக வினர் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். 

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தம்பிதுரையை சாடியுள்ளார். 

"பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை எனக் கூற தம்பிதுரைக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதா?" என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். 

 
 

Advertisment

English Summary

BJP angry on Thambidurai

 
NewsFast Logo