Advertisment

Punnagai Logo

மன்னார்குடி பவர் சென்டருக்கு பீஸ் போய்விட்டது - திவாகரன் மீது தினகரன் அட்டாக்

மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுகூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தினகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது;

 என் சொந்த ஊர் கூட்டம் என்பதால் மிகவும் மகிழ்ச்சியோடு கலந்து கொள்ள வந்தேன். பொதுச்செயலாளர் சின்னம்மா இல்லாமல் தனியாக வந்திருப்பதுதான் வருத்தமாக உள்ளது. அம்மா  மறைவிற்கு பிறகு நம்மால் முதல்வர் ஆனவர்கள் துரோகம் செய்து விட்டார்கள்.  முட்டை, பருப்பு, சாலை என அனைத்திலும் ஊழல் நடக்கிறது. ஊழல் செய்வதற்காகவே பல திட்டங்கள் உருவாக்கப்படுகிறது.

தூர்வாருதலுக்காக ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாய் நிதி முழுவதும் ஊழல் செய்யப்பட்டுள்ளது. காட்டிலிருந்து வந்தவர் போலவும், இதுவரையில் மனிதர்களைப் பார்காதவர் போலவும் முதலமைச்சர் பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய உறவினர்களுக்கே காண்ட்ராக்ட் கொடுத்திருக்கிறார். எல்லாம்  2000 கோடி, 4,000 கோடி டெண்டர்தான். இது குறித்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரனை நடத்த வேண்டும்.

திருப்பரங்குன்றம் தொகுதி எனக்கு சொந்த ஊரான மன்னார்குடி போன்றது. எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம். மன்னார்குடியில் ஒரு பவர் சென்டர் இருந்தது. அது தற்போது பீஸ் போய் உள்ளது. அ.ம.மு.கவில்  உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தான்ட போகிறது. தாய் எட்டு அடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாயும் என்பதற்கு ஏற்றார் போல் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். 

விவசாயிகளை குறிவைத்து மத்திய, மாநில அரசுகள் தாக்குதல் நடத்துகிறது. டெல்டா மாவட்டங்களில் 2.5 லட்சம் ஏக்கரை அழிக்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் தீட்டி வருகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் அதில் 200 தொகுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம். நீங்கள் ஓட்டிற்கு 10,000 ரூபாய் கூட கொடுங்கள். சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்கள் ஒன்றாக வரும். அதில் வெற்றி பெற்ற பிறகு அ.ம.மு.கவின் முதல் வெற்றி பொதுகூட்டம், எனது சொந்த மண்ணான மன்னார்குடியில் நடக்கும்.

 டெல்டா  மண்ணில் வைரமே கிடைத்தாலும் எங்களுக்கு வேண்டாம். காவிரி படுகையில் விவசாயத்தைத் தவிர வேறு எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தினகரன் சிரித்துக்கொண்டே இருக்கிறான் என்று எண்ணிவிடாதீர்கள். உங்கள் பினாமி யார் என்பது குறித்த ரகசியம் அத்தனையும் தெரியும். செய்த ஊழல்கள் குறித்த ஆதாரங்களும் உள்ளது. இப்போது போலீஸ் பாதுகாப்போடு வரும் நீங்கள், நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஜெயிலுக்கு செல்வது உறுதி. 

அமைச்சர் ஆர்.காமராஜ் மாற்று வேட்டிக்கு கூட வழியில்லாமல் இருந்தார். இன்றைக்கு எப்படி இருக்கிறார். அவரும் முதல்வரைப் போல அக்கா மகன், மாமா மகன் என உறவினர்களுக்கு டெண்டரைக் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் யாருமே விரும்பாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்துகிற நேரம் வந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்..

 
 

Advertisment

English Summary

Dinakaran Attach on Divakaran

 
NewsFast Logo