Advertisment

Punnagai Logo

மேகதாது அணை விவகாரம் -  4-ந்தேதி, திருச்சியில் தி.மு.க கூட்டணி ஆர்ப்பாட்டம் 

மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை வலியுறுத்தி, டிசம்பர் 4-ந்தேதி, திருச்சி மாநகரில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. 

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை ரூ.6 ஆயிரம் கோடி செலவில் கட்ட முடிவு செய்துள்ளது.

இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். மேலும் தமிழக அரசு நாளை இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளது.

இந்த நிலையில் மேகதாது பிரச்சனை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை தி.மு.க. இன்று கூட்டியது. அண்ணா அறிவாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. உள்பட 9 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"தமிழகத்தில் மிச்சமிருக்கும் விவசாயத்தையும் அழித்தொழித்து, குடிநீர் சேகரிப்பதற்காக ஏற்கனவே தாய் மார்கள் அனுபவித்து வரும் துன்பங்களைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

5,912 கோடி ரூபாய் மதிப்பில் 66 டி.எம்.சி. காவிரி நீரை தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதும், அதன் மூலம் அம்மாநிலத்தின் விவசாய நிலப்பரப்புகளை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொள்ளத் திட்டமிடுவதும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கும் அந்த இறுதித் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கும் முற்றிலும் எதிரானது.

காவிரி விவகாரத்தில் தொடக்கம் முதலே நீதிமன்றங்களின் தீர்ப்புகளைச் சிறிதும் மதிக்காமலும் அவற்றிற்கு எதிராகவும் தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் கர்நாடக மாநில அரசு, தமிழகத்தின் கருத்தினைக் கேட்காமல் புதிய அணை கட்டுவது, இரு மாநிலங்களின் நெடுங்கால நல்லுறவிற்கும் கூட்டாட்சிக் கொள்கைக்கும் குந்தகம் விளைவிக்கும் முயற்சி என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்துக்காட்ட விரும்புகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கட்சி பேதம் கருதாமல் பொது நலனுக்காக ஒன்றிணைந்து, பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது.

அதுமட்டுமன்றி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஏகோபித்த உணர்வுகளையும் ஏழரைக் கோடி தமிழக மக்களின் உணர்வுகளையும் உதாசீனப்படுத்திவிட்டு, தேர்தல் ஆதாயம் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடகாவில் புதிய அணை கட்ட மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தை வஞ்சிக்கும் சூழ்ச்சியாகும்.

மத்திய அரசின் இந்த அனுமதி, காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி, கார்ப்பரேட்டுகளின் பெட்ரோலியப் பொருள்கள் வேட்டையை ஊக்கப்படுத்தி, தமிழகத்தின் வேளாண் பொருளாதார முன்னேற்றத்தைத் தரை மட்டமாக்கிப் புதைத்து விடும் படுபயங்கர வஞ்சக நடவடிக்கையின் பிரதிபலிப்பே ஆகும்.

அடிக்கடி மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்திக்கும் அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் “மாநில நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்” என்று அறிவித்தாலும், மேகதாது அணை கட்டுவதற்கான மத்திய அரசு அனுமதியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது.

எனவே, மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் “விரிவான திட்ட மதிப்பீட்டறிக்கை” தயாரிப்பதற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

அ.தி.மு.க. அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த அனுமதியை ரத்து செய்ய தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி இந்த அனுமதியை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வற்புறுத்த வேண்டுமெனவும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி வருகின்ற 2018 டிசம்பர் 4-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று காலை 10 மணியளவில் திருச்சி மாநகரில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது."

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் தி.மு.க. சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் சார்பில் வி.அன்புராஜ், கலிபூங்குன்றம் பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மு.வீரபாண்டியன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபுபக்கர் எம்.எல்.ஏ., யூசுப் குலாம் முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பொதுச்செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் கோவை உமர் உள்ளிட்ட 9 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்

 
 

Advertisment

English Summary

DMK all party meet

 
NewsFast Logo