Advertisment

Punnagai Logo

தி.மு.க.வின் தோழமை கட்சிகள், எங்கள் அணிக்கு வர விருப்பம் : அமைச்சர் ஜெயக்குமார் 

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், தி.மு.க. வின் தோழமை கட்சிகளும் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறினார்.

அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. 

இதில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள், அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட ‘பூத் கமிட்டி’ விவரங்கள், ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரம் குறித்து கூறியதாவது:-

"மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான வருகிற 24-ந்தேதி ஏழை மக்கள் இருக்கும் இடத்துக்கு தேடிச்சென்று அறுசுவை உணவு, இலவச சீருடை, ஆதரவற்றோர்-முதியோர் இல்லங்களில் உணவு போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், ஏற்கனவே முடுக்கிவிடப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் எண்ணமான ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’ எனும் இலக்கை அடைய, அரசின் திட்டங்களை குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் மக்களோடு இருந்து பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டிகள் அமைத்து, எதிர் வரும் தேர்தலில் அ.தி.மு.க. இமாலய வெற்றி பெறும் வகையில் பணிகள் அமையவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், யாருடன், யார் கூட்டணி? என்பது தெரியும். எதிரியாக உள்ள தி.மு.க., முதுகில் குத்திய துரோகியான அ.ம.மு.க. தவிர, அ.தி.மு.க. தலைமையில் யார் வந்தாலும், தொகுதி பங்கீடு பேசி, முடிவுகள் வெளியாகும். இன்றைய நிலையில் கூட்டணி முடிவாகவில்லை. அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணி மெகா கூட்டணியாகத்தான் இருக்கும்.

பலர் எங்களுடன் கூட்டணி சேர தயாராக உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட அ.தி.மு.க.வுடன் வருவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர். அதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது. அது ரகசியம்." இவ்வாறு அவர் கூறினார்.

 
 

Advertisment

English Summary

DMK allies ready to join with us - Jayakumar

 
NewsFast Logo