கஜா புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதி யானைப் பசிக்கு சோளப்பொறி போன்று உள்ளது என்றும் அதை வைத்து எதையும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
"இந்திய அளவில் பட்டாசு வெடிக்க தடையில்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு காரணம் நமது முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைதான்.
தமிழக அரசு என் முன் வந்து நிற்பதால் பட்டாசு வெடிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் நீதிபதிகள் கூறிப்பிட்டுள்ளனர்.
தற்போது பட்டாசு வழக்கில் நீதிமன்ற உத்தரவால் விருதுநகர் மாவட்ட மக்கள் சிரமத்தை சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு பிரச்சனை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு சென்றுள்ளேன். அதிகாரிகளோடு கலந்து பேசி சொல்வதாக என்னிடம் தமிழக முதல்வர் தெரிவித்தார்.
கஜா புயல் பாதிப்பை மத்திய அரசிடம் நாங்கள் கேட்ட நிதி கிடைக்கவில்லை. மிகப்பெரிய பாதிப்பை டெல்டா மாவட்டம் சந்தித்துள்ளது. கொடுமையான பாதிப்பை டெல்லா மாவட்ட விவசாயிகள் சந்தித்துள்ளனர். அனைத்து அமைச்சர்களும் டெல்டா மாவட்டங்களில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
மத்திய அரசு ஏன் நமக்கு தேவையான நிதியை கொடுக்க மறுக்கின்றது என்று டெல்டா மாவட்ட மக்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கிறது.
தமிழக அரசு கேட்ட நிதியை கொடுத்திருந்தால் கூடுதல் திட்டங்கள் கிடைத்திருக்கும் என்று டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மத்திய அரசு கொடுத்த நிதி யானைப் பசிக்கு சோளப்பொறி போன்று உள்ளது. அதை வைத்து எதையும் செய்ய முடியாது."
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
English Summary
Minister blames Centre for least assistance