Advertisment

Punnagai Logo

பிளஸ் 2 மாணவர்களுக்கான வரைவு பாடத்திட்டம் 20ம் தேதி வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நூலகத் தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா, குழந்தைகள் தின விழா சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ் அரங்கத்தில் நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி பேசியதாவது:

மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பயிற்சி மையங்களை தொடங்கி  வைத்துள்ளோம். நூலக நிதி ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நூல்களை வாங்கி  வைக்க ரூ.6 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் பிளஸ் 2 முடித்த பிறகு உயர் கல்வியில் என்ன படிக்கலாம், வேலை வாய்ப்புள்ள படிப்புகள் எவை என்பது குறித்து அறிந்து கொள்ள உதவி மையம் (Helpline) திட்டம் ஒன்று 24ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

அதேபோல வரைவுப் பாடத்திட்டம் 20ம் தேதி வெளியிடப்படும். ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும். அதில் சிப் பொருத்துவது தொடர்பாக வழக்கு உள்ளதால் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் தள்ளிப்போனது. டிசம்பர் இறுதியில் அதுவும் வழங்கப்படும். நூலகத் துறையை பொறுத்தவரையில் நூலகர் விருதுடன் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. 
அடுத்த ஆண்டு முதல் அது ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.  இன்னும் பல திட்டங்களை இந்த அரசு கொண்டு வர உள்ளது. இவற்றை பயன்படுத்தி மாணவர்கள் வெற்றி பெற வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் கற்றல் திறன் குறைபாடு உள்ளவர்கள் சுமார் 12 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு தனியாக பயிற்சி அளிக்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான மையங்கள் டிசம்பர் இறுதியில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 
 

Advertisment

English Summary

Plus 2 students draft syllabus release on 20th

 
NewsFast Logo