Advertisment

Punnagai Logo

சிலை கடத்தல் - மாநில அரசிடம் ஆவணம் கேட்கும் பிரதமர் அலுவலகம்

சென்னை, செப்.11: சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கூடுதல் ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

சிலை கடத்தல் வழக்குகளை  விசாரிப்பது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க போலீஸ் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு பிரிவை அமைத்து, 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் யானை. ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு பெஞ்ச் நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்து பிறப்பித்த தமிழக அரசணைக்கு தடை விதித்தது. இந்த தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Image result for idol theft in tamilnadu

அதில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றம் செய்ய எடுத்த முடிவானது அரசின் கொள்கை முடிவாகும். இதில், நீதிமன்றம் தலையிட முடியாது. கும்பகோணம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை போலீஸ் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் விசாரிக்க தடை கிடையாது. அந்த வழக்குகளை அவரது தலைமையிலான தனிப்படை தொடர்ந்து விசாரிக்கலாம். அதை தவிர்த்து, மற்ற வழக்குகள்தான் சிபிஐக்கு மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிறப்பு பெஞ்ச் நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்தது தொடர்பான, கூடுதல் ஆவணங்கள், விளக்கத்தை அளிக்கும்படி மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தமிழக அரசிடம் கேட்டுள்ளது. அதை அனுப்பி வைக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் சீனிவாசன், சிலை கடத்தல் வழக்குகளை மாற்றம் செய்து, சிபிஐ இணை இயக்குனர் அலுவலகத்துக்கு தமிழக அரசு கோப்புகளை அனுப்பி வைத்தது. அதனை டெல்லியில் இருக்கும் சிபிஐ இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். இன்னும் பதில் வரவில்லை என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பான நிலைப்பாட்டை சிபிஐ இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். சிபிஐக்கு மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.  அதற்கு தமிழக அரசு வழக்கறிஞர், அந்த ஆவணங்களை நாளை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.  ஒருவேளை, இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ மறுத்தால் என்ன செய்வீர்கள் ? என்று தமிழக அரசு தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், வழக்கு மாற்றம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும்தான் கேட்டுள்ளது.

அதனால், சிபிஐ விசாரிக்க மறுப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை. மேலும், இச்சிலை கடத்தல் சம்பவத்தில், தமிழகத்தின் எல்லை தாண்டி மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர்கள் தொடர்பு இருப்பதால், மாநில போலீசார் இவ்வழக்கை விசாரிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 24 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதற்கிடையில், புதுக்கோட்டை பிரஹதாம்பாள் கோவிலில் மரகதகல்லால் ஆன பிரஹதாம்பாள் சிலையை மீட்கக் கோரி, கோவிலின் பக்தர் ஆனந்த் மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சிலை கடத்தல் பிரிவில் 2013ல் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, இக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து பதில் அளிக்கும்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 20 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

 
 

Advertisment

English Summary

Smuggling - The Prime Minister's office asking the state government

 
NewsFast Logo