Advertisment

Punnagai Logo

கோடையில் கொஞ்சம் ஆறுதல் - தென் மற்றும் உள் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று  தெற்கு மற்றும் வட உள்தமிழகத்தில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வடக்கு உள்கர்நாடகம் முதல் தெற்கு உள் தமிழகம் வரை வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மேலும், தென் தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக தெற்கு, வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் வடக்கு கடலோரப் பகுதி, புதுச்சேரியில் சில இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சூறைக்காற்றும், இடியுடன்கூடிய மழையும் பெய்யும்.

வெப்ப நிலையைப் பொறுத்தவரை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரியாகவும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் அதிகபட்சமாக 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக ராஜபாளையம், திண்டுக்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், கந்தர்வக்கோட்டை, கீரனூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தார்.

தமிழகத்தில் நேற்று பரவலாக கோடை மழை பெய்ததால் வெப்ப நிலை சற்று குறைந்து காணப்பட்டது. திருச்சி, திருத்தணி, மதுரை விமான நிலையம், வேலூரில் மட்டும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியது.

 
 

Advertisment

English Summary

Today chance for rain in the south Tamil Nadu

 
NewsFast Logo