பிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை மலேசிய போலீசார் கைது செய்தனர்.
ரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது. தற்போது இந்த தம்பதி தெற்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். பயண செலவிற்காக அவர்கள் தாங்கள் செல்லும் நாடுகளில் வித்தை காட்டி பணம் சேகரிக்கிறார்கள்.
அந்த வகையில் மலேசியா சென்ற ரஷிய தம்பதி தலைநகர் கோலாலம்பூரில் மக்கள் மத்தியில் வித்தை காட்டினர். அப்போது அந்த 4 மாத குழந்தையின் தந்தை குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டினார். குழந்தையின் காலை பிடித்து தலைகீழாக சுற்றியும், குழந்தையை தலைக்கு மேல் வீசி ஏறிந்து கைகளால் பிடித்தும் வித்தை செய்ய, அருகில் உட்கார்ந்திருந்த தாய் கைதட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார்.
இதை ஒருவர் செல்போனில் படம் பிடித்து ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த போலீசார் குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Russian couple arrested for dangerous circus with kid